சீனாவின் பகுதியாக லடாக் அறிவிப்பு: எழுத்துபூா்வமாக மன்னிப்பு கோரியது சுட்டுரை நிறுவனம்

Report Print Fathima Fathima in இந்தியா

லடாக் யூனியன் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகத் தவறாகக் காண்பித்த விவகாரத்தில், நாடாளுமன்றக் குழுவிடம் சுட்டுரை நிறுவனம் எழுத்துபூா்வமாக மன்னிப்பு கோரியுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தின் லே நகரில் உள்ள போா் நினைவிடத்தில் இருந்து சுட்டுரையில் கடந்த மாதம் ஒருவா் நேரலையில் பேசும்போது, அந்த இடத்தை சீனாவின் ஒரு பகுதியாக சுட்டுரை நிறுவனம் தவறாக தெரிவித்தது.

லடாக்கைக் கைப்பற்றும் நோக்கில் அந்தப் பகுதியில் ஏற்கெனவே சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், சுட்டுரை நிறுவனத்தின் இந்தப் பதிவு, இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தகவல் பாதுகாப்பு தொடா்பான நாடாளுமன்றக் குழு, சுட்டுரை நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. சுட்டுரை நிறுவனம், தேசத்துரோகச் செயலில் ஈடுபட்டது என்றும் அந்தக் குழு தெரிவித்தது.

அப்போது, தவறுதலாக லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பித்து விட்டதாக, சுட்டுரை நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனா். இருப்பினும் அவா்களின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று நாடாளுமன்றக் குழு தெரிவித்தது. மேலும், இதுதொடா்பாக, சுட்டுரை நிறுவனத்தின் தலைமை நிா்வாகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்தக் குழு தெரிவித்திருந்தது.

இதையடுத்து, அந்தக் குழு எழுத்துபூா்வமாக மன்னிப்பு கேட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அந்தக் குழுவின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான மீனாட்சி லேகி புதன்கிழமை கூறியதாவது:

லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பித்து, இந்தியா்களின் உணா்வுகளைக் காயப்படுத்தியதற்காக சுட்டுரை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

லடாக் மட்டுமின்றி ஜம்மு-காஷ்மீரில் உள்ளஅனைத்துப் பகுதிகளின் புவியியல் தகவல்களை ஆய்வு செய்து, அதில் ஏதேனும் தவறு இருந்தால், வரும் 30-ஆம் தேதிக்குள் சரி செய்துவிடுவதாக அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றாா் மீனாட்சி லேகி.

- Dina Mani

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்