தமிழகத்தில் பொலிசார் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தில், பல கொடூர விஷயங்கள் நடந்துள்ளது, சிபிஐ எப்.ஐ.ஆரில் அம்பலமாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவருக்கு பென்னிக்ஸ் என்ற 31 வயது மகன் உள்ளார்.
பென்னிக்ஸ் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20-ஆம் திகதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக பொலிசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் நிலையில் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும், அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அதன் பின் இருவரும் பொலிசாரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இச்சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டு மக்கள் பலரையும் கொந்தளிக்க வைத்தது.
இந்நிலையில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸின் கொடூர சித்ரவதை பற்றி சிபிஐ எப்.ஐ.ஆரில் அம்பலமாகியுள்ளது.
ஜூன் 16-ஆம் திகதி இரவு 7.30 மணி அளவில் வணிகர்கள் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை சாத்தான்குளம் பொலிசார் கைது செய்தது.
காவல் நிலையத்தின் அறையில் ஆடைகளை களைந்து தந்தையையும் மகனையும் காவலர்கள் தாக்கி உள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை மேஜை மீது குனிய வைத்து பின்புறத்தில் காவலர்கள் கொடூரமாக அடித்துள்ளனர்.
இருவரையும் திமிரவிடாமல் 3 காவலர்கள் பிடித்து கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், காவலர் முத்துராஜா அடித்துள்ளனர்.
தந்தையையும் மகனையும் மாறி மாறி பொலிசார் தாக்கியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது. ரத்தம் சொட்ட சொட்ட 2 பேரையும் பொலிசார் கொடூரமாக தாக்கி உள்ளது.
மேலும், பென்னிக்ஸ் தாயாரின் இரத்தத்துடன், காவல்நிலையத்தில் சிதறிக் கிடந்த இரத்தத்தை ஒப்பிட்டு பார்த்த போது, மரபணு சோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.