கூட்டு துஷ்பிரயோகம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட இளம்பெண் மரணம்: குடும்பத்தினருக்கு முகத்தை காட்டாமல் உடலை எரியூட்டிய பொலிஸ்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 19 வயது இளம் பெண்ணின் உடலை குடும்பத்திற்கு கூட காட்டாமல் பொலிசார் இரவோடு இரவாக எரியூட்டிய சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியலின பெண்ணை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், 14 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த அவர் சிகிச்சை பயனின்றி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெண்ணின் உடல் இரவோடு இரவாக ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு கூடிய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள், முகத்தை காட்டும் படி போராடியுள்ளனர், மேலும், உடலை கடைசியாக ஒருமுறை வீட்டில் வைக்க வேண்டும் என குடும்பத்தினர் பொலிசாருடன் மன்றாடி உள்ளனர்.

ஆனால், பொலிசார் ஈவு இரக்கமின்றி யாருக்கும் முகத்தை கூட காட்டாமல், குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களை வீட்டிற்குள் அடைத்துள்ளனர்.

உடலை நேராக எரியூட்டும் இடத்திற்கு கொண்டு சென்ற பொலிசார், ஊடகத்தினரையும் அருகில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக உடலை பொலிசாரே எரியூட்டியுள்ளனர். இச்சம்பவம் வீடியோவாக வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்