விமான விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? வெளியான பயணிகளின் மொத்த பட்டியல்: அதிகரிக்கும் பலி!

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை சொந்த ஊருக்கு அழைத்துவரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.

விமானம், கோழிக்கோடு அருகேயுள்ள காரிப்பூர் விமான நிலையத்தில் இன்று இரவு உள்ளூர் நேரப்படி சரியாக 7.40 மணிக்கு தரையிறங்கியது.

கேரளாவில் மழை பெய்துவரும் நிலையில், தரையிறங்கும்போது ஓடு தளத்தில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தாக்கில் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய 2 மாவட்ட ஆட்சியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக முதலில் 2 பேர் பலியாகியிருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 170 பேர் மீட்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த பைசல் பாபு என்பவரின் மனைவி(28) ஷானிஜா மற்றும் 5 வயது மகன் முகமது ஜிடான் ஆகிய இருவர் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுக்கா பள்ளிப்பாடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் என தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 3 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

மேலும், இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த விபத்து காரணமாக விமானம் இரண்டாக உடைந்து நொறுங்கி கிடக்கும் புகைப்படங்களும், விபத்தி ல் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்காக அவர்களை மீட்டுச் செல்லும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்