வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்கும் வழக்கிற்கான செலவு முழுவதையும் சீமான் ஏற்று, முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அக்கட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில செயலாளர் வெண்ணிலா தாயுமானவன் கூறியுள்ளார்.
இதைப் பற்றி பலரும் தெரியமால் இருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை குறித்து தற்போது தெரியவந்தால், நாம் தமிழர் கட்சியினை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில், இந்த வழக்கிற்கான செலவு முழுவதையும் சீமான் ஏற்றுக் கொண்டதாக அக்கட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில செயலாளர் வெண்ணிலா தாயுமானவன் கூறியுள்ளார்.
அவர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், சரணாலயத்தில், பறவைகள் இல்லையென்றால் அந்த இடமே பாலைவனம்தான்.
வனவிலங்குகள் சரணாலயமோ, பறவை சரணாலயமோ அமைந்திருந்தால் அந்த இடத்தைச் சுற்றி வெளி நிறுவனங்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சில கிலோ மீற்றர்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வெளிப்புறத்தில் விடுவது சட்ட விதிமுறை.
சரணாலயத்தைச் சுற்றி எந்தவித தொந்தரவும் செய்யாமல் இருக்கவே இந்த விதிமுறை. தமிழக அரசும் சன் பார்மா நிறுவனமும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் விதமாக நடந்து கொள்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் மத்திய சூழலியல் அமைச்சகத்திடம் வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீற்றரிலிருந்து 3 கிலோ மீற்றராக குறைக்க போகிறோம் என தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது.
அன்றில் இருந்து, இந்திய அளவில் சூழலியல் ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழக அரசின் இம்முடிவை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
மருந்து கம்பெனி நீண்ட காலமாக சரணாலயத்தின் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. அதன் எல்லை விரிவாக்கத்திற்கு கடந்த மே மாதம் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி கோரினார்கள்.
அந்த எல்லை விரிவாக்கம் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில்தான் வருகிறது. இதனை எதிர்த்து முதலில் கடந்த ஜூன் மாதம் வனத்துறை, சூழலியல் துறை உள்பட 4 துறைகளுக்கு நாங்கள் புகார் அளித்தோம்.
ஆனால் அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. இதனால் ரிட் மனு தாக்கல் செய்தோம். அந்த ரிட் மனுவை நீதிமன்றம் எடுத்துக் கொண்டுதான் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
நான் எங்கள் கட்சி சார்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சூழலியல் சார்ந்த பணிகளை செய்து கொண்டு வருகிறேன்.
அதில் வேடந்தாங்கல் போராட்டம் தான் இந்திய அளவில் சூழலியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாகும்.
வேடந்தாங்கல் நம் தமிழ் மண்ணின் பெருமை. முதல் அடி நமதாகத்தான் இருக்க வேண்டும் என்றுதான் இந்த பிரச்சினையை எடுத்தோம்.
சரணாயலத்தை காரணம் காட்டி வேடந்தாங்கலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சாலை பணிகளை அமைப்பதற்கு தமிழக அரசு மறுத்துள்ளது.
அப்படியிருக்கும் போது பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோ மீற்றரில் இருந்து 3 கிலோ மீற்றராக குறைக்கிறோம் என கூறுவதை மட்டும் எப்படி ஏற்க முடியும்?
ஜனவரியில் தமிழக அரசு சொல்லிய போது எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மருந்து கம்பெனியும் அனுமதி கோரியபோதுதான் புரிந்தது.
இருவரும் திட்டமிட்டே அனுமதி கோரியுள்ளார்கள். இன்று 2 கிலோ மீற்றர் வரை குறைப்பவர்கள் நாளை மீதமுள்ள 3 கிலோ மீற்றரையும் கையில் எடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
பல சூழலியல் ஆர்வலர்கள் வேடந்தாங்கலுக்குச் சென்று அங்குள்ள நீரையும் காற்றையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த நீரில் 4 வகையான ரசாயனங்கள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவை எல்லாமே அந்த சரணாலயத்தை சுற்றியுள்ள 7 நிறுவனங்களின் கழிவுகள்தான்.
இதனால் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பறவைகள் வருவதற்கு செடி, மரம், கொடி ஆகியவை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
ஆனால் அரசு அப்படி எதையும் செய்யவில்லை. சரணாலயத்தில் பறவைகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.
ஏற்கெனவே நிலைமை இப்படியிருக்கும் போது சன் பார்மா நிறுவனத்திற்கு 2 கிலோ மீற்றரை கொடுத்துவிட்டால் பறவைகளுக்கு பேராபத்தாக முடியும்.
அரசின் இந்த முடிவை எதிர்த்து சட்டப் போராட்டமும் மக்கள் போராட்டமும் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். கடுமையாக எதிர்ப்போம். நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை இதனை வேடிக்கை பார்க்காது.
மருந்து கம்பெனியை எதிர்த்து வழக்கு போட்டோம். இயற்கை வளத்தை பாதுகாக்க எங்களுக்கு கட்சி சார்பில் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நம் மண்ணின் பெருமையை நாம் தான் காக்க வேண்டும். நான் செலவு செய்கிறேன். நீங்கள் சட்டரீதியாக வெற்றி பெறுங்கள் என முழு ஆதரவை கொடுத்து சீமான் ஊக்கப்படுதினார்.
வேடந்தாங்கல் பிரச்சினையை தமிழகத்தில் முதல்முதலில் கையில் எடுத்தது எங்கள் கட்சிதான். எந்த எதிர்க்கட்சிகளும் இப்பிரச்சினைகளுக்கு வாய் திறக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.