மரணதண்டனை தாமதம் ஏன்? நீதிபதி முன் கண்ணீர் விட்டு கதறி அழுத நிர்பயாவின் தாயார்

Report Print Santhan in இந்தியா

மகள் பாலியல் குற்ற வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான புதிய திகதி அறிவிக்கும் விவகாரத்தில், நீதி மீதான நம்பிக்கையை இழக்கிறேன் என்று, நீதிபதி முன்பு நிர்பயாவின் தாயார் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

டெல்லியில் நிர்பயா என்ற இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்ததற்கு தடை விதித்து, தண்டனையை நிறைவேற்ற புதிய திகதியை அறிவிக்க வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் சார்பில் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது சிறை நிர்வாகம் சார்பிலான வாதத்தில், குற்றவாளிகளின் செயல் அனைத்தும் சட்டத்தை ஏமாற்றும் வேலையாக உள்ளதால் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய திகதியை அறிவிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா சார்பில் நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், நிர்பயா வழக்கில் தமக்கு சட்ட நிவாரணம் பெற்றுத் தர வழக்கறிஞர் இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி சட்ட உதவி வழங்க உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட நிர்பயாவின் தாயார், இந்த வழக்கில் ஏழு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறேன். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் புதிய திகதியை உடனே அறிவியுங்கள் என்று கூறி நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் விசாரிப்பதாக நீதிபதி ஒத்திவைத்தார்.

நிர்பயாவின் தாயார் கூறுகையில், என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் குற்றவாளிகள் நான்கு பேரும் சட்டத்தில் உள்ள தந்திரங்களை பயன்படுத்தி தண்டனையை தாமதிக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

இதை நீதிமன்றங்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது. இதனால் நீதி மீதான நம்பிக்கையை நான் இழக்கிறேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்