கிணற்றின் உள்ளிருந்து கேட்ட முனகல் சத்தம்! அங்கு சென்று பார்த்த மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி இரக்கமின்றி கொன்ற தாய், தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மூலசெங்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (33). இவருடைய மனைவி திவ்யா (30). இவர்களுக்கு வர்னிகா(3), தன்ஷிகா(1½) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் தங்கள் விவசாய தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று காலையில் இளையராஜாவின் தாயார் வழக்கம் போல் காலையில் எழுந்தவுடன், தங்கள் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றுக்கு முகம் கழுவ சென்றார்.

அப்போது கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அவர் எட்டி பார்த்தார். அங்கு மருமகள் திவ்யா, குழந்தை வர்னிகாவுடன் கிணற்றில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் வீட்டிற்கு விரைந்து வந்து இளையராஜாவிடம் தகவல் தெரிவித்த நிலையில் இது குறித்து அறிந்து அக்கம் பக்கத்தினரும் அங்கு விரைந்து வந்து கிணற்றில் உயிருக்கு போராடிய திவ்யா மற்றும் குழந்தை வர்னிகாவை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் குழந்தை வர்னிகா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அவளை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்தார். பின்னர் முதுகெலும்பு உடைந்து உயிருக்கு போராடிய திவ்யாவுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மற்றொரு குழந்தை தன்ஷிகாவை பொதுமக்கள் கிணற்றில் தேடினர். பின்னர் அந்த குழந்தையின் உடலையும் அங்கிருந்து மீட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் 2 குழந்தைகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திவ்யாவுக்கும், அவருடைய மாமியாருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதாகவும், இதனால் மனம் உடைந்து திவ்யா இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்