பசியும், பட்டினியுமாக கோடீஸ்வரர்... சாலையில் கிடக்கும் பரிதாபம்! வெளியான சோக பின்னணி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை கேட்டு, மகன் அடித்து, துன்புறுத்துவதால், 80 வயது மதிக்கத்தக்க கோடீஸ்வர் ஒருவர் பசியும், பட்டினியோடும் சாலையோரத்தில் படுத்து கிடந்த சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சேலத்தை அடுத்த ஆர்.கே. அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

ராமசாமிக்கு, பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். தன் பிள்ளைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்த இவர், தன்னுடைய மகன்-மருமகள் வசிக்கும் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ராமசாமியின் பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை மகன் பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்துவதாக மகள்களிடம் கூறியுள்ளார். ஆனால் மகள்களும் இதை கண்டு கொள்ளாததால், இது தொடர்பாக காவல்நிலையம், மக்கள் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் புகாரளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்காமல், சாதரணமாக சமரசம் பேசி அனுப்பிவிடுவதால், மிகவும் வேதனையடைந்த, ராமசாமி, சொத்து தொடர்பான ஆவணங்களை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் போட்டுக்கொண்டு சாலையோரத்திலும் பேருந்து நிழற்குடைகளிலும் படுத்துறங்கி, பசி பட்டினியோடு சுற்றி வந்துள்ளார்.

இவரது நிலையைப் பார்த்த செய்தியாளர்கள் சிலர், உணவு வாங்கிக் கொடுத்து உதவி செய்ததோடு, தனியார் ஆதரவற்றோர் அமைப்பிடம் சேர்த்து விட்டனர்.

கோடீஸ்வரர், இத்தனை ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர் இப்படி பசியும், பட்டினியுமாக கிடக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்