திருமணமான சில வாரத்தில் மனைவியை விட்டு வெளியூர் சென்ற கணவன்! அதன்பின்னர் புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவனேசன் (34). அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீரச்சிபாளையத்தை சேர்ந்த மாகாளி என்பவரின் மகள் தங்கமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிவனேசன் முதல் திருமணத்தை மறைத்து, ஆலங்குடி அருகே உள்ள குலமங்கலம் தெற்கு பூக்காரன் தெருவை சேர்ந்த மாசிலாமணியின் மகள் பிருந்தாதேவியை (28) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது பிருந்தாதேவி வீட்டில் இருந்து 25 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

திருமணம் முடிந்து ஒரு வாரகாலம் மனைவியுடன் இருந்த சிவனேசன், பின்னர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீரச்சிபாளையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் ஊருக்கு வரவில்லை.

பிருந்தாதேவி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஊருக்கு வந்து கூட்டிச்செல்வதாக கூறியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து, பிருந்தாதேவியை கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறும், அவருக்கு அரசு அதிகாரி வேலை வாங்கி தரும் நடவடிக்கையை தான் மேற்கொள்வதாகவும் சிவனேசன் கூறியதாக தெரிகிறது.

இதை நம்பாத பிருந்தாதேவி, தனது குடும்பத்தினருடன் சிவனேசன் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்தவர்கள், சிவனேசனின் வீட்டை காட்டியுள்ளனர். வீட்டிற்கு சென்ற பிறகுதான், சிவனேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது, அவர்களுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முதல் திருமணத்தை மறைத்து, தன்னை 2-வதாக திருமணம் செய்து ஏமாற்றிய சிவனேசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிருந்தாதேவி பொலிசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பொலிசார் சிவனேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்