நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடப்போறவர் இவர் தான்... யார் இவர் தெரியுமா? வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது இரக்கம் காட்ட கூடாது, அவர்கள் மனிதர்கள் கிடையாது என்று குற்றவாளிகளை தூக்கிலிடும் நபர் பவன்குமார் கூறியுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அந்த மாணவியின் உண்மையான பெயர் வெளியிடாமல் நிர்பயா என்று ஊடகங்களால் கூறப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் 18 வயதுக்கு குறைவாக இருந்ததால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

வினய்குமார் சர்மா, முகேஷ் சிங், அக்‌ஷய் குமார் சிங் மற்றும் பவன் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளிகள்

இவர்கள் 4 பேருக்கும் பிப்ரவரி ஒன்றாம் திகதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில், குற்றவாளிகள் அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் சிங் சார்பில் வழக்கறிஞர் ஏபி சிங், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில், அக்‌ஷய் குமார் சிங், பவன் சிங் ஆகியோருக்கு மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை வழங்குவதற்கு திகார் சிறை அதிகாரிகள் தாமதம் செய்கின்றனர், என கூறப்பட்டுள்ளது.

ஹேங்மேன் பவன் குமார்

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 1-ஆம் திகதி நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நான்கு 4 பேரையும் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த ஹேங்மேன் பவன் குமார் என்பவர் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இருக்கிறார்.

இவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் எடுத்துள்ள பேட்டியில், குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் போவது பற்றி எனக்கு பூஜ்யம் அளவு கூட எந்த அனுதாபமும் கிடையாது. அவர்கள் கொடூரமானவர்கள்.

அதனால் தங்கள் வாழ்க்கையை இழக்க போகிறார்கள். இந்த 4 பேரும் மிருகங்களை போன்றவர்கள். அவர்கள் மனிதர்கள் கிடையாது. தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும்.

ஆயுள் தண்டனை கொடுத்தால், அவர்கள் மேல்முறையீடு செய்து வெளியே வருவார்கள். மேலும், பல குற்றங்களை செய்வார்கள். இதுபோன்றவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும் என்று கூறியுள்ளார்.

இவரது குடும்பத்தினர் கடந்த 3 தலைமுறைகளாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக இருந்து வருகின்றனர்.

3 தலைமுறைகளாக இதை செய்த போதிலும், பவன் குமார் நிறைவேற்றப்பட உள்ள முதல் தூக்கு தண்டனை இதுவாகும். பவன் குமாரின் தாத்தா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொன்றவர்கள் மற்றும் 1982-ஆம் ஆண்டு கடத்தல் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேரை தூக்கிலிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...