மசூதிக்குள் கோலகலமாக நடந்த இந்து திருமணம்! மெய்சிலிர்க்க வைத்த மாமனிதர்கள்: நெகிழ வைக்கும் சம்பவம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மசூதிக்குள் இந்து திருமணம் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்தியாவில் சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மசூதியில் இந்து திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சேரவள்ளி முஸ்லிம் ஜமாத் மசூதியின் வளாகத்தில், பிந்து மற்றும் அசோகனின் மகள் அஞ்சு, மற்றும் சரத் ஆகியோர் திருமணம் காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணிக்குள் நடைபெற்றது. திருமணம் முழு இந்து பாரம்பரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் அசோகன் இறந்த பிறகு, பிந்து கடன்களால் போராடி வருகிறார், அவர் தனது மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

மகள் அஞ்சு திருமணத்தை நடத்த அவர் பணத்திற்காக சிரமப்பட்டபோது, அவரது அண்டை வீட்டுக்காரரான ஜமாத் செயலாளர், ஜமாத் குழுவை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பிந்து உதவி கோரியபோது மத வேறுபாடுகள் குறித்து கவலைப்படாமல், ஜமாத் கமிட்டி உதவ முன்வந்துள்ளது. ஜமாத் உறுப்பினர்களில் ஒருவர் திருமண செலவுகளை ஏற்க முன்வந்துள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்தவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவர்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர்.

ஜமாத் கமிட்டி திருமண பரிசாக அன்ஜூவுக்கு 10 சரவன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் வழங்கியுள்ளனர்.

இந்து சடங்குகளின் படி திருமணம் நடைபெற்றது. சுமார் 1,000 பேருக்கு நாங்கள் சைவ உணவு ஏற்பாடு செய்துள்ளோம் என்று சேரவள்ளி ஜமாத் குழுவின் செயலாளர் நுஜுமுதீன் ஆலும்மூட்டில் தெரிவித்துள்ளார்.

நான் அவர்களின் இளைய குழந்தை படிப்புக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்தேன். இந்த முறை, திருமணத்திற்கான செலவுகள் மிக அதிகமாக இருப்பதால் ஜமாத் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, குடும்பத்திற்கு உதவ குழு முடிவு செய்தது என்று நுஜுமுதீன் கூறினார்.

கேரளாவிலிருந்து ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இச்சம்பவம் நடந்திருப்பதாக நெகிழ்ச்சியடைந்த அம்மாநில முதல்வர் பினராய் விஜயன், டவிட்டரில் புதுமணத் தம்பதிகள், குடும்பங்கள், மசூதி அதிகாரிகள் மற்றும் சேரவள்ளி மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்