மனைவியை கொன்றுவிட்டு 3 ஆண்டுகளாக நாடகமாடிய கணவர்: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் புதுக்கோட்டையில் மனைவியை ஆள்வைத்து கொன்றுவிட்டு 3 ஆண்டுகளாக கணவர் நாடகமாடிய வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரண்யாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி பொலிசார் விசாரிக்க, 2018ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சிபிசிஐடி பொலிசாருக்கு வழக்கு கைமாறியது. அவர்களது விசாரணையில் கணவர் ரமேஷ் கொடுத்த தகவல்களில் சந்தேகம் ஏற்பட, அவரை அழைத்துச் சென்று விசாரணையை துரிதப்படுத்தினர்.

விசாரணையில் மனைவி சரண்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தனது ‌நண்பர்கள் ரகு, பாட்ஷா உள்ளிட்ட நான்கு பேரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து கொலை செய்யுமாறு கூறியதை ரமேஷ் ஒப்புக்கொண்டார்.

அவர்கள் ஒன்று சேர்ந்து தனது மனைவியை கொலை செய்துவிட்டு, சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டதாகவும் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.

ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அவரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி பொலிசார், சரண்யாவை வீசிச் சென்ற கிணற்றை அடையாளம் கண்டுபிடித்தனர்.

பின்னர் சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின் சரண்யாவின் எலும்புக்கூடை தோண்டி எடுத்தனர்.

அதனை பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற சிபிசிஐடி பொலிசார், ரமேஷ், பாட்ஷா மற்றும் ரகு உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர்.

மனைவியை கணவரே ஆள் வைத்துகொன்றுவிட்டு மூன்று வருடம் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்