உள்ளாட்சி தேர்தலில் தனியாக களமிறங்கும் நாம் தமிழர் கட்சி! என்ன சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சி பொறுப்பாளர்களுக்கு சீமான் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

சென்ற பாராளுமன்ற தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், இடைத்தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னமும் ஒதுக்கப்படவில்லை.

கடந்த இடைத்தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

இது தொடர்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும்.

அதன் அடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும்.

வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப் பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...