12 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட இளம்பெண் சடலம் மீண்டும் தோண்டி எடுத்து அதிகாரிகள் சோதனை

Report Print Vijay Amburore in இந்தியா

12 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி இரவு விஜயவாடா அருகே இப்ராஹிம்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியின் குளியலறையில், 19 வயதான மாணவி ஆயிஷா மீரா என்பவரின் உடல், ரத்தக் கறையுடன் பல குத்து காயங்களுடன் காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 2008 ஆம் ஆண்டில், செல்போன் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சத்யம் பாபு என்கிற இளைஞர் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறினர்.

இதனையடுத்து விஜயவாடாவில் உள்ள மஹிலா நீதிமன்றம், செப்டம்பர் 10, 2010 அன்று, சத்யம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் ஆயிஷாவின் குடும்பத்தினர், குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக குற்றம் நடந்த இடத்திலிருந்து ஆதாரங்களை அழித்துவிட்டு அப்பாவியை கைது செய்திருப்பதாக குற்றம்சாட்டினர். மேலும், அப்போதைய அமைச்சரின் உறவினர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறினர்.

இதற்கிடையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஹைதராபாத் உயர் நீதிமன்றம், 2017 ஆம் ஆண்டில் தலித் இளைஞரான சத்யம் பாபுவை விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, புதிய விசாரணை நடத்த மாநில அரசு, சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. எஸ்ஐடியின் விசாரணையை உயர் நீதிமன்றம் மேற்பார்வையிட்டது. இருந்தபோதிலும் இந்த வழக்கு தொடர்பான அனைத்து பதிவுகளும் விசாரணை நீதிமன்றத்தால் அழிக்கப்பட்டன.

எஸ்ஐடி விசாரணையை நடத்திய விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், 2018 நவம்பரில் இந்த வழக்கை சிபிஐக்கு ஒப்படைத்தது.

வழக்கு தொடர்பான பதிவுகளை அழிப்பது குறித்து விசாரணை நடத்தவும் அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் சில ஊழியர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் குழு ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் தெனாலி நகரில் உள்ள கல்லறையில் பிரேத பரிசோதனை செய்தது. சிபிஐ அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செவ்வாய்க்கிழமை அதிகாலை உடல் வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையில், ஆந்திராவின் திஷா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் முதல் வழக்கு இதுவாக இருப்பதை உறுதி செய்யுமாறு ஆயிஷாவின் தாய் ஷம்ஷாத் பேகம் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான மசோதாவை மாநில சட்டமன்றம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றியது. அந்த மசோதா, விசாரணை மற்றும் விசாரணையை முடிக்க வேண்டிய காலமாகவும் 21 நாட்களை நிர்ணயித்தது.

ஷம்ஷாத் பேகம் சனிக்கிழமையன்று ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளில் காவல்துறை மற்றும் முழு விசாரணை அமைப்பிலும் நம்பிக்கையை இழந்ததாக கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் கொலை செய்யப்பட்ட பிரியங்கா வழக்கில், பொலிஸ் நடவடிக்கைக்கு ஆதரவளித்த ஷம்ஷாத் பேகம், விரைவான நீதியை உறுதிப்படுத்த மற்ற வழக்குகளில் ஏன் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை..?

"நிர்பயா சட்டம் இருந்தது, இப்போது திஷா சட்டம் உள்ளது. ஆனால் ஏன் ஆயிஷா சட்டம் அல்லது ஆசிஃபா சட்டம் இல்லை" என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், "தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளில் நீதி வழங்கப்படுகிறது. இது பணக்காரர்களுக்கும் சக்திவாய்ந்தவர்களுக்கும் மட்டுமே. அதே சமயம் எங்களைப் போன்ற சாதாரண மற்றும் ஏழைக் குடும்பங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதில்லை" என்று கூறினார்.

முன்னதாக 2012 ல் டெல்லியில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பின்னர் நிர்பயா சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஹைதராபாத் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயரில் திஷா சட்டம் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்