நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு 16ம் திகதி தூக்கு?

Report Print Vijay Amburore in இந்தியா

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கும் எதிர்வரும் 16ஆம் திகதியன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதியன்று டெல்லியை சேர்ந்த நிர்பயா என்கிற இளம்பெண் ஓடும் பேருந்தில், பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த விவகாரமானது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார், முகேஷ் சிங், ராம் சிங், முகம்மது அப்ரோஸ் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போது ராம் சிங் சிறை வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். முகம்மது அப்ரோஸ் சிறுவயது என்பதால் விடுவிக்கப்பட்டார்.

சம்பவம் நடைபெற்று 7 வருடங்களுக்கும் மேல் ஆகியிருக்கும் நிலையில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட பின்னரும் கூட, தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் எஞ்சியிருக்கும் குற்றவாளிகள் நால்வருக்கும் எதிர்வரும் 16ம் திகதியன்று திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

இதற்காக ஏற்கனவே 5 கயிறுகள் தயாராக உள்ள நிலையில், மேலும் 11 கயிறுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா அல்லது மேற்கு வங்கத்திலிருந்து இரண்டு பேர் அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டனைக்கான நேரம் நெருங்கிவிட்ட நிலையில், குற்றவாளிகள் நான்கு பேரும் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அறையை சுற்றிலும் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு, அதிகாரிகளும் கவனித்து வருகின்றனர்.

இதுகுறித்து நிர்பயாவின் தாய் கூறுகையில், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விடயம் இழுத்தடிக்கப்படுகிறது. எல்லாம் அரசாங்கத்தின் கையில் உள்ளது. டிசம்பர் 16 அவர்கள் தூக்கிலிடப்பட்டால், அது என் மகளுக்கு ஒரு பெரிய அஞ்சலி எனக்கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்