பாசமாக வளர்த்த ஒரே மகளை ஷார்ஜாவில் பறிகொடுத்த இந்திய தம்பதி!

Report Print Vijay Amburore in இந்தியா

ஐக்கிய அமீரகத்தில் இந்தியாவை சேர்ந்த 15 வயது சிறுமி, 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷார்ஜாவின் அல் நபா பகுதியில் உள்ள கட்டிடத்தின் 10 வது மாடியில் இருந்து, 15 வயது இந்திய சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமையன்று குதித்து உயிரிழந்தார். சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் சந்தேகித்து வருகின்றனர்.

சுமார் 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரவு 11:00 மணியளவில் அவர் குவைத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்னர் அவருடைய உடலானது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mathrubhumi

இதற்கிடையில், சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அறிய ஷார்ஜா பொலிஸ் அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நந்திதா என அடையாளம் காணப்பட்ட அந்த சிறுமி, ஷார்ஜாவில் உள்ள இந்திய பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி வட்டாரங்களின்படி, அவர் தனது பெற்றோருக்கு ஒரே குழந்தை.

நந்திதாவின் தாய் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், அவரது தந்தை கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

நந்திதா தனது சமீபத்திய தேர்வுகளில் 'குறைந்த மதிப்பெண்கள்' பெற்றிருந்ததாகவும், அதனைப்பற்றி குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடந்ததாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. சிறுமியின் பாட்டி சனிக்கிழமை இந்தியாவுக்கு புறப்படவிருந்தார். சம்பவம் நடந்தபோது குடும்பத்தினர் இரவு உணவிற்கு வெளியே செல்லத் தயாராகி கொண்டிருந்தனர். அவர் நழுவி விழுந்தாரா அல்லது அது தற்கொலைதானா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

சிறுமியின் பெற்றோர், முழு அதிர்ச்சியில் உள்ளனர். யாருடனும் பேசும் நிலையில் இல்லை. அவர்கள் குடும்ப மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளனர் எனக்கூறியுள்ளார்.

குடும்ப நண்பர்களின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் தந்தை துபாயில் ஒரு முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் அவரது தாயார் யூடியூபில் உணவு சமைக்கும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் 200,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்