ஹைதராபாத்தில் 4 பேர் என் கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பில் சைராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கமளித்துள்ளார்.
கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை பொலிசாரால் அவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த என் கவுண்ட்டருக்கு பின்னால் இருக்கும் காவல் துறை ஆணையர் சஜ்ஜனார் இது குறித்து விளக்கமளித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், கடந்த டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய திகதிகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தோம், அப்போது குற்றவாளிகள் எங்களிடம் பல உண்மைகளை தெரிவித்தனர்.
இன்று அதிகாலை அவர்களை சம்பவம் நடந்த இடத்துக்கு விசாரணை தொடர்பாக அழைத்து வந்தோம்.
அப்போது அவர்கள் பொலிசாரை கொம்பால் அடித்ததோடு, எங்கள் ஆயுதங்களை பிடுங்கி பொலிசாரை நோக்கி சுட தொடங்கினார்கள்.
அப்போது பொலிசார் அவர்களை எச்சரித்ததோடு, சரணடைய சொன்னார்கள், ஆனால் அதை கேட்காத அவர்கள் தொடர்ந்து சுட்டபடி இருந்தார்கள்.
இதையடுத்தே நாங்கள் அவர்களை நோக்கி சுட்டு என் கவுண்ட்டர் செய்தோம். என்கவுண்ட்டர் காலை 5.45 மணியிலிருந்து 6.15 மணிக்குள் நடந்தது, பொலிசார் சுட்ட உடனேயே அவர்கள் இறந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தின் போது இரண்டு பொலிசாருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.
குற்றஞ்சாட்டவர்களிடம் இருந்து இரண்டு ஆயுதங்களை கைப்பற்றினோம்.
அவர்களின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. என்கவுண்ட்டர் குறித்து மாநில அரசுக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் விளக்கம் தரப்படும்.
இந்த நான்கு பேர் மீது வேறு பல வழக்குகள் கர்நாடகாவில் இருக்கும் என சந்தேகிக்கிறோம், இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.