புதுப்பெண்ணை புதைக்க கணவர் வீட்டு வாசலில் தோண்டப்பட்ட பெரிய குழி! அதன்பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த நிலையில் அவரை புதைக்க கணவர் வீட்டு வாசலில் பெரிய குழி தோண்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவருக்கும் புவனேஸ்வரி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நவீன்குமார், புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த 18ம் திகதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உடலை புதைக்க அதிரடியாக முடிவு செய்தனர்.

அதன்படி வீடு முன்பு திரண்ட உறவினர்கள் அங்கு எந்திரம் மூலம் பெரியளவில் பள்ளம் தோண்டி புவனேஸ்வரி சடலத்தை புதைக்க தயாரானார்கள்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்களை புவனேஸ்வரியின் உறவினர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உறவினர்களை சமாதானம் செய்து வீட்டு வாசலில் உடலை புதைக்கும் முடிவை கைவிட வைத்தனர்.

ஆனால் பின்னர் நேற்று மாலை நவீன்குமார் தோட்டத்தில் புவனேஸ்வரி உடல் புதைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையில் புவனேஸ்வரி தற்கொலை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்