வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் இருப்பதை யாரிடமும் சொல்லாமல் உயிரிழந்த பெண்... அதன் பின் நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் உயிரிழந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ 25 லட்சத்தை எடுத்து செலவு செய்த இரண்டு வங்கி அதிகாரிகள் வசமாக சிக்கியுள்ளனர்.

திருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், ஐஓபி வங்கியில் தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் பணத்தை வைப்பு தொகையாக வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா உயிரிழந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

அந்த வங்கியின் மேலாளரான ஷேக் மொய்தீன் (58) மற்றும் உதவி மேலாளராக சின்னத்துரை ஆகியோர் எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அறிந்து கொண்டனர்.

இதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர்.

பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்தது போல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.

அதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர்.

இந்நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது.

அப்போது வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஷேக் மொய்தீன், சின்னத்துரை ஆகியோரின் குட்டு வெளிபட்டது.

இதையடுத்து ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் இருவர் மீதும் 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்