பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து உயிரிழந்த குழந்தை! கிடுக்குபிடி விசாரணை

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன் பள்ளியில் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூல் மாவட்டம் பன்யம் பகுதியில் இயங்கி வரும் விஜயனிகேதன் உயர்நிலைப்பள்ளியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த மாணவன் புருஷோத்தம் குறித்த பள்ளியில் யூகேஜி பயின்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று உணவு இடைவெளியின் போது புருஷோத்தம் கொதிக்கும் சாம்பார் பாத்திரத்திற்குள் விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன், சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புருஷோத்தமனின் மரணம் பெற்றோர், உறவினர் என அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அவர்கள் நீதிக்கோரி பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்துகிறோம், ஆனால், இப்போது யார் என் மகனை உயிருடன் தருவார்? மாணவன் எப்படி சாம்பாருக்குள் விழ முடியும்? உணவு இடைவெளியின் போது ஏன் மாணவர்களை கண்காணிக்க ஒருவர் கூட இல்லை? இது அலட்சியம் அல்லவா? என மாணவனின் தந்தை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

newsminute

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஜயகுமார் ரெட்டி மற்றும் கரஸ்பாண்டன்ட் நாக மல்லேஸ்வர் ரெட்டி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

முற்கட்ட விசாரணையில் உணவு உண்ணும் அறையை கண்காணிப்பதில் அலட்சியம் காட்டியதே விபத்திற்கு வழிவகுத்தது என பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் சாய் ராம், தங்கும் விடுதிக்கு அனுமதி இல்லாத போதிலும், பள்ளியில் 1,300 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர் என்று கூறினார்.

இது தொடர்பில் பள்ளிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறிய சாய் ராம், அதிகாரிகள் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்து பள்ளியை மூடக்கூடும் என்று கூறினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்