தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என நம்பியே பாத்திமாவை அனுப்பினேன்- கதறும் தாய்க்கு என்ன பதில்? சீமான் காட்டம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சீமான் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவி பாத்திமா லத்திப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.

கடந்த ஓராண்டில் மட்டும் அங்கு நடக்கும் ஐந்தாவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும். பாத்திமா மதிப்பெண் குறைவால்தான் தற்கொலை செய்துகொண்டார் எனத் தொடக்கத்தில் கூறப்பட்டாலும் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனத் தற்போது வெளிவந்திருக்கும் ஆதாரங்களின் மூலம் தெரிய வந்திருக்கிறது. மதரீதியாக தொடுக்கப்பட்ட உளவியல் தாக்குதல்கள் தான் மாணவியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உறுதியாகியிருக்கிறது.

பாத்திமா மரணத்திற்கு பேராசிரியர்கள் சுதர்சன், மிலிந்த் ப்ராமே, ஹேமச்சந்திர காரா ஆகியோர் தான் காரணம் என அவரது அலைபேசியின் வாயிலாகக் கண்டறிப்பட்டிருக்கிறது.

மாணவியின் தாயார், நாட்டில் நிலவிவரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகளை முக்காடு அணியக்கூட வேண்டாமென்றோம்.

எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் பாத்திமா லத்தீப் ஆகிவிட்டதே? எனக் கதறுவது இந்தியாவின் பன்முகத்தன்மையையும், மதச்சார்பின்மையையும் கேள்விக்குள்ளாக்கி இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.

தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என நம்பித்தான் அனுப்பி வைத்தோம். இப்படி ஆகிவிட்டதே? எனப் புலம்பித் தவிக்கும் அவரது தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் எனப் புரியவில்லை.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரிய கவனமெடுத்து பாத்திமா மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தி அவரது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும், ஏற்கனவே உயிரிழந்த மாணவர்களின் மரணம் குறித்து ஆய்வு செய்ய உரிய குழு அமைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers