காருக்குள் எரிக்கப்பட்ட பிரபல தொழிலதிபர்!... குற்றவாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

திருச்சியின் காட்டுப்பகுதியில் கார் ஒன்றிலிருந்து எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருச்சியின் ஆட்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த தச்சன்குறிச்சி காட்டுப்பகுதியில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருப்பதாக சிறுகனூர் பொலிசுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், காரை சோதனையிட்டதில் டிரைவர் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

முற்றிலுமாக எரிந்த நிலையில் சடலம் இருந்ததுடன், அந்த காரின் ‘நம்பர் பிளேட்’ முற்றிலும் எரிந்து இருந்ததால், அதன் பதிவு எண்ணும் தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த காரின் ‘என்ஜின்’ எண் மற்றும் ‘சேஸ்’ எண்ணை வைத்து அந்த சொகுசு கார் யாருடையது என்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த சொகுசு கார் திருச்சி காட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஜாகீர்உசேன் (வயது 51) என்பவருக்கு சொந்தமானது என்பதும், அவர் கார்களை வாங்கி, விற்கும் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரின் மகனான அன்சரிடம் விசாரணை நடத்தியதில், இறந்தது தனது தந்தையே என்பதை உறுதி செய்தார்.

தொடர்ந்து ஜாகிர் சேனின் செல்போனை ஆராய்ந்ததில், கடைசியாக குன்னுமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடன் பேசியது தெரியவந்தது.

அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், அவர் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் கூறிய தகவலில், நானும் ஜாகீரும் சேர்ந்து கார் மற்றும் ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம்.

ஜாகிர் என்னிடம் நிறைய கடன் வாங்கிவிட்டு, என்மீது பொலிசில் புகார் அளித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்கு என் நண்பர்களான மணிகண்டன், சக்திவேல் மற்றும் மோகன் உதவி செய்வதாக கூறினார்கள்.

இதன்படி ஜாகிரை கடலூர் மாவட்டம் ராமநத்தம் பகுதிக்கு வரவழைத்து தனியார் விடுதியில் வைத்து கொலை செய்தோம்.

தொடர்ந்து சடலத்தை காரில் வைத்து ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் வைத்து தீ வைத்து எரித்துவிட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சரவணன் மற்றும் அவரது நண்பர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்