உங்க மகள் இறந்துட்டா.. தாய்க்கு வந்த அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு! தமிழ் பெண் பற்றி வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

கேரளாவில் பொலிசுக்கும், மாவோயிஸ்ட்டுக்கும் நடந்த மோதலில் உயிரிழந்த அஜிதா என்ற பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்று உறுதியான நிலையில், அஜிதாவைப் பற்றி அவருடைய தாய் சில தகவல்களை கூறியுள்ளார்.

தமிழ்நாடு, கேரள எல்லையான அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சக்கண்டி வனப் பகுதியில் கேரள நக்ஸல் தடுப்பு பொலிசார் கடந்த மாதம் 28-ஆம் திகதி சோதனையில் ஈடுபட்டுனர்.

அப்போது அப்பகுதியில் மாவோயிஸ்ட்டுக்ள் பதுங்கியிருப்பதை பொலிசார் கண்டுபிடித்ததால், இரு பிரிவினருக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட, இதில் 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த நான்கு பேரும் தமிழர்கள் எனவும் இதில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரும் இருந்ததாகவும் அவரின் பெயர் ஸ்ரீநிதி என்று கூறப்பட்டது, அதன் பின் அவரின் உண்மையான பெயர் அஜிதா என்று தெரியவந்தது.

இந்நிலையில் அஜிதா கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரின் தாய் சொர்ணத்திக்கு கடந்த 9-ஆம் திகதி ஒரு பெண் போன் செய்துள்ளார்.

சொர்ணம்/அஜிதா

தன்னைப் பற்றி கூறாத அந்த பெண், கேரள மாநிலம் அட்டப்பாடியில் பொலிசுக்கும், மாவோஸ்ட்டுகளுக்கும் நடந்த மோதலில் கொல்லப்பட்ட பெண் உங்கள் மகள் அஜிதா. எனவே, அங்கு சென்று அடையாளங்களைக் கூறி உடலைப் பெற்றுச்செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இது குறித்து சொர்ணம் கூறுகையில், எனக்கு மூன்று பிள்ளைகள். அஜிதா சிறு வயதாக இருக்கும் போதே கணவர் இறந்துவிட்டார்.

இதனால் நான் தான் கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்தேன். அஜிதாவை இந்தப் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் 12-ம் வகுப்புவரை படிக்க வைத்தார்.

அதன் பின், நாகர்கோவிலில் ஒரு கல்லூரியில் பி.ஏ படித்தார். மேற்படிப்பிற்காக சென்னை சென்ற அவள், திடீரென பாதியிலே திரும்பிவிட்டாள்.

அதன்பிறகு சிலர் நிதி உதவி செய்ததால் மதுரை சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். விடுதியில் தங்கிப்படித்தவள், 2014-ஆம் ஆண்டு அவ்வப்போது போன் செய்வாள். நாங்கள் அழைப்பதற்கு அவளது மொபைல் எண்ணைக் கேட்டதற்கு அவளிடம் செல்போன் இல்லை என்றும் நான் உங்களுக்கு போன் செய்யும்போது பேசினால்போதும் என்று மட்டுமே கூறுவாள்.

அப்படி ஒரு முறை போன் செய்த போது, படிப்பை நிறுத்திவிட்டு வேலை பார்ப்பதாக கூறினாள், வேலை எல்லாம் பார்க்க வேண்டாம், நீ ஊருக்கு திரும்பி வா என்று கூறினேன்.

ஆனால் அவள் என்னிடம் சண்டை போட்டு போனை வைத்துவிட்டாள். என்ன வேலை பார்க்கிறாள்? எங்கு இருக்கிறாள்? என்பது எல்லாம் எனக்கு தெரியாது.

கடந்த சனிக்கிழமை அந்த போன் வந்தது. திடீரென அவள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போனில் சொன்னதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசு உதவினால் அங்கு சென்று உடலைப் பார்த்து அடையாளம் கூற தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அஜிதாவைப் பற்றி பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும்போது அஜிதாவிற்கு மாவோஸ்ட்டுகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் கொள்கையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் அந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்