மூன்றாண்டுகளில் கசந்த காதல் திருமணம்: மின்சாரம் பாய்ச்சி மனைவியைக் கொல்ல முயன்ற இளைஞர்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தில் மாமனாரைக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த நபர், மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர், பெங்களூருவில் உடன் பணிபுரிந்த ரூபிகா என்பவரை காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ரூபிகாவின் தந்தை தங்கவேலுவுக்கு, திருமணச் செலவுகளுக்காக சிவப்பிரகாசம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பணத்தை சிவப்பிரகாசம் திருப்பிக் கேட்ட போது, மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் திகதி இருவருக்கும் இடையே தகராறு அதிகரிக்கவே, இதய நோயாளியான தங்கவேலுவை சிவப்பிரகாசம் கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த நாமக்கல் பொலிசார் சிவப்பிரகாசத்தைக் கைது செய்தனர்.

இதை அடுத்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றார் ரூபிகா.

இந்த நிலையில் 6 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சிவப்பிரகாசம், தனது மனைவியையும், குழந்தையையும் பார்க்கச் சென்றுள்ளார்.

ஆனால், சிவப்பிரகாசத்துடன் குடும்பம் நடத்த வரமறுத்த ரூபிகா, குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த சிவப்பிரகாசம், கடந்த ஜூன் 23ஆம் திகதி அன்று மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கொலையை விபத்து போல் மாற்றுவதற்காக வீட்டிற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து இரண்டு ஒயர்களை 5 அடி நீள கம்பியுடன் இணைத்து இரும்புக் கதவின் மீது போட்டதாகவும், அப்போது ரூபிகாவின் தாயார் வளர்மதி பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிவப்பிரகாசத்தின் திட்டத்தை அறிந்து கொண்ட வளர்மதி இதுதொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை அடுத்து சிவப்பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில், சிவப்பிரகாசம் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே நடமாடுவதாக தனிப்படைக்கு ரகசியத் தகவல் கிடைக்கவே அங்கு சென்ற பொலிசார், அவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்