கோவில் பிரசாதத்தில் கொடிய விஷம்... 10 பேரை கொன்ற மந்திரவாதி: அம்பலமான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பண மோசடியில் ஈடுபட்டு, கோவில் பிரசாதம் என சயனைடு விஷம் கொடுத்து 10 பேரை கொன்ற மந்திரவாதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள எலுரு பகுதியை சேர்ந்தவர் வேலங்கி சிம்ஹாத்ரி என்ற 38 வயது சிவா. நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.

இதில் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக மோசடியில் ஈடுபட முடிவு செய்த அவர் தன்னிடம் மந்திர சக்திகள் இருப்பதாக கூறி அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.

மேலும், தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி உள்ளார். இதை நம்பிய சிலர் அவரிடம் லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகையை கொடுத்துள்ளனர்.

பணம் மற்றும் நகைகளை கைப்பற்றிய பின்னர் சயனைடு விஷம் கலந்த கோவில் பிரசாதத்தை ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எந்த காயங்களும் இல்லாமல் அவர்கள் இயற்கையாக இறந்து விட்டதாக தெரியவே சயனைடு விஷம் கலந்துள்ளார்.

சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான நாகராஜூ என்பவர் ரூ.2 லட்சம் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவரது சகோதரர் வெங்கடரமணா எலுரு பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

நாகராஜூவின் செல்போன் மற்றும் சில சி.சி.டி.காட்சிகள் மூலம் பொலிசார் துப்பு துலக்கினர். இதில் சிவா காவல்துறையிடம் சிக்கினார். விசாரணையில் நாகராஜூவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் தனது பாட்டி, மைத்துனர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நில உரிமையாளர், மத போதகர் உள்பட மொத்தம் 10 பேருக்கு சயனைடு வி‌ஷம் கொடுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் கடந்த 20 மாதங்களில் இந்த கொலைகளை தனி ஆளாக செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை ரூ.25 லட்சம் மற்றும் 35 பவுன் நகை மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

சிவாவை கைது செய்த பொலிசார் அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்களின் தொடர்பு எண்கள் இருந்துள்ளன.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சிவா தன்னிடம் பணம் மற்றும் நகை கொடுத்து ஏமாந்த மேலும் 20 பேரை கொலை செய்ய திட்டமிட்டதும் அம்பலமானது.

இந்த விவகராம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்