மணமேடையில் தாலியை கழற்றி வீசி 'பளார்' விட்ட மணமகள்: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலே திடீரென தாலியை கழற்றி வீசி மணமகனின் கன்னத்தில், மணமகள் 'பளார்' விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கூலித்தொழில் செய்துவரும் விஜி என்பவருக்கும், ரேவதி என்கிற இளம்பெண்ணுக்கும் நேற்று கோவில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

இதில் இரு வீட்டை சேர்ந்த உறவினர்களும் திரளாக கலந்துகொண்டனர். கெட்டிமேளம் முழங்க, உறவினர்கள் பூ தூவ நல்ல முறையிலே திருமண நிகழ்வு நடந்து கொண்டிருந்தது.

அதன்பின்னர் மாப்பிள்ளை மணமகளின் நெற்றியில் பொட்டு வைக்க முயன்றார். அப்போது அவருடைய கையை தட்டிவிட்ட மணமகள், திடீரென கன்னத்தில் 'பளார்' என அறைந்துள்ளார்.

இதனை பார்த்து அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, அர்ச்சகர் மட்டும் மணமகளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

அவரையும் கன்னத்தில் ஓங்கி அறைந்த மணப்பெண், கட்டிய தாலியை கழற்றி வீசி எறிந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட, இரு வீட்டாரையும் வெளியே போகுமாறு கூறிவிட்டு, அர்ச்சகர் கோவில் கதவை இழுத்து பூட்டியுள்ளார்.

அதன்பின்னர் இருவீட்டாரும் பொலிஸ் நிலையம் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மணமகளுக்கு மனநிலை சரியில்லாததும், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.

பின்னர் விஜிக்கும், உறவுக்கார பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து உறவினர்கள் இருவரையும் வாழ்த்தி உணவருந்தி விட்டு சென்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்