மனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்... மிரட்டும் பொலிஸ்! நிம்மதியில்லாமல் தவிக்கும் கணவன்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் வருவது குறித்து கணவர் புகார் அளித்தும், பொலிசார் அதை கண்டு கொள்ளவில்லை என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் பொலிசாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது மனைவியின் செல்போனுக்கு தொடர்ந்து வேறொரு நம்பரிலிருந்து போன் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ் வந்து கொண்டே இருந்துள்ளது.

இதனால் கார்த்திக், அங்கிருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளிக்க முயன்றுள்ளார். காலை சென்ற அவரின் புகாரை மாலை வரை காத்திருந்தும், பொலிசார் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த வேதனையடைந்த கார்த்திக் வீடியோ ஒன்றை எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வீடியோவில், நான், கோயம்பேடு கே.10 போக்குவரத்து காவல் நிலையத்தில் பொலிசாராக பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி செல்போனுக்கு ஒரு நபர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி வருகிறார்.

இதுபற்றி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தால், காலை முதல் மாலை வரை காத்திருந்தும் எனது புகாரை ஏற்கவில்லை.

காரணம் கேட்டால், எனது மனைவிக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதாகவும், பொய் புகார் அளிப்பதாக என் மீது வழக்கு பதிவு செய்வோம், எனவும் அவர்கள் மிரட்டுகின்றனர். கோயம்பேடு காவல் நிலையத்தில் பணம் எதிர்பார்க்கிறார்களா?,

நான் பணம் தரவும் தயாராக உள்ளேன். அப்போதாவது, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், எங்களது குடும்பத்தில் நிம்மதி இல்லை. எனவே, உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வேதனையுடன் கூறியுள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்