வங்கி சேமிப்பில் ரூ.80 லட்சம்... சிகிச்சைக்குப் பணம் தர மறுத்த வங்கி: முதியவருக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் வங்கி மோசடி காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பணம் எடுக்க முடியாமல் முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியானது கர்நாடகா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கியில் 4,355 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியில் பணம் போடுவது, புதிதாகக் கடன் வழங்குவது, பணம் எடுப்பது போன்றவற்றிற்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இந்நிலையில் 80 வயது முரளிதர் தர்ரா என்பவர் இந்த வங்கி மோசடியால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முரளிதர் தர்ரா.

இவர் தன் பகுதியில் உள்ள பி.எம்.சி வங்கியில் 80 லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதய அறுவை சிகிச்சை செய்தால்தான் முதியவர் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு சில லட்சம் பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டால் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யமுடியாமல் முதியவர் முரளிதர் மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அவரது மகன், டீ கடை நடத்திப் பிழைத்து வந்த தமது தந்தை அதில் வரும் பணத்தை பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் சிறிது சிறிதாகச் சேமித்து வந்தார்.

அக்டோபர் 11 ஆம் திகதி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

அதற்காகப் பணம் எடுக்க நான் வங்கிக்குச் சென்றேன். என் தந்தையின் நிலையை அங்குள்ள அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் அவர்கள் பணம் தரச் சம்மதிக்கவில்லை.

என் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதே வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளனர்.

அதனால் அவர்களாலும் உரிய நேரத்தில் உதவி செய்யமுடியவில்லை. வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என்ற விவரத்தைத் தந்தையிடம் கூறும்போதே அவர் தான் இறக்கப் போவதை ஏற்றுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார் என முரளிதர் தர்ராவின் மகன் பிரேம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்