தேசம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கமலேஷ் திவாரி கொலை..! கண்ணீர்விட்டு கதறும் மனைவி

Report Print Kabilan in இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த கமலேஷ் திவாரி, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில், இந்து சமாஜ் கட்சியின் தலைவராக இருந்தவர் கமலேஷ் திவார்(45). இவர் இதற்கு முன்பு இந்து மகாசபை அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.

லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள இவரது வீட்டில், நேற்றைய தினம் மதியம் திடீரென நுழைந்த மர்ம நபர்கள், கையில் கொண்டு வந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த கமலேஷ் திவாரி, ஆபத்தான நிலையில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அலுவலகத்தில் நுழைந்த நபர்கள் இருவர், பரிசுப்பொருள் கொடுப்பது போல் வந்து இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக இந்து மகாசபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திவாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உடனடியாக அங்கு இறுதிச்சடங்கு நடத்தப்படவில்லை.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் வரை, திவாரியின் உடலை எரிக்க மாட்டோம் என உறவினர்கள் கூறினர். அத்துடன் தன் கணவரை பிரிந்து தன்னால் வாழ முடியாது என்றும், தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் திவாரியின் மனைவி கண்ணீர் விட்டு அழுதது, உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், கமலேஷ் திவாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ட்விட்டரில் இந்த விடயம் ட்ரெண்டிங்கில் உள்ளதால் தேசம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்