ஆசையை தூண்டி பல கோடி ரூபாய் சுருட்டிய தம்பதி... விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திரைப்பட பாணியில் 300-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தைச் சேர்ந்த தம்பதி மணிவண்ணன்-இந்துமதி. மணிவண்ணன், மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

அப்போது அவர், தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாட்களில் கொடுக்கப்படும் பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த நிறுவன தயாரிப்புகளான ஊறுகாய், மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான டீலர்சிப் மற்றும் அதன் மூலமாக வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் போன்ற பல்வேறு கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிட்டு ஆசையை தூண்டியுள்ளார்.

மணிவண்ணனின் இந்த அறிவிப்பை நம்பிய பலர் அவர் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். துவக்கத்தில்,

முதலீடு செய்தவர்களுக்கு குறிப்பிட்டபடி பணத்தை வழங்கிய மணிவண்ணன், நாட்கள் செல்லசெல்ல தன் மீது இருக்கும் நம்பிக்கையை அதிகரித்த பின்பு, முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் காரணம் சொல்லாமல் அலைகழித்துள்ளார்.

இதில் சுதாரித்துக்கொண்ட பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அதன் பின்னர் தொடர்ந்து மணிவண்ணன் மீது புகார்கள் அதிகரித்ததால், தனிப்படை அமைத்து மணிவண்ணனை கண்காணித்த குற்றப்பிரிவு பொலிசார், மணிவண்ணன் மற்றும் அவரது மனைவி இந்துமதி ஆகியோரை கைது செய்தனர்.

மணிவண்ணன் செய்த குற்றத்திற்கு இந்துமதியும் உடந்தையாக இருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 10 சவரன் நகை, இரண்டு சொகுசு கார்கள் மற்றும் லேப்டாப், 13 செல்போன்கள் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர். மணிவண்ணன் தம்பதி 300-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்