இந்தியாவில் பொதுவெளியில் மலம் கழித்ததற்காக அடித்து கொல்லப்பட்ட 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாவ்கேதி கிராமத்தைச் சேர்ந்த ரோஷானி (12) என்ற சிறுமியும் அவினாஷ் (10) என்ற சிறுவனும் சில தினங்களுக்கு முன்னர் கிராம பஞ்சாயத்துக்கு அலுவலகத்துக்கு அருகில் மலம் கழித்துள்ளனர். அதனால், அவர்கள் இருவரையும் ஒரு கும்பல் சேர்ந்து கடுமையாகத் தாக்கியது. மயங்கிவிழுந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட ராமேஸ்வர், ஹகிம் யாதவ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ரோஷானியின் உறவினர்கள், சிறுமி கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து பேசிய சிறுமியின் அண்ணன், சிறுமி தாக்கப்பட்ட இடத்துக்கு நான் சென்றபோது, சிறுமியின் ஆடைகள் கிழிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன்.
அவளுடைய பேண்ட்டின் (கீழாடை) கயிறு அவிழ்க்கப்பட்டு இருந்தது. மலம் கழித்ததற்காக மட்டும் சிறுமி தாக்கப்படவில்லை. அவளுக்கு பாலியல் துன்புறுத்தலும் நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சிறுமியின் அண்ணி, ஒரு மாதத்துக்கு முன்னர், ரோஷானி அழுது கொண்டே என்னிடம் வந்து ஹகிம் யாதவ் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததோடு இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக தெரிவித்தாள், நான் தான் பிரச்னையாகிவிடும் என்று எனது கணவரிடம் கூறவில்லை என்று தெரிவித்தார்.
பொலிசார் கூறுகையில் பாலியல் வன்முறை செய்ததாக இதுவரையில் புகார் வரவில்லை. ஆனால், அப்படி நடந்திருந்தால் அது விசாரணையில் தெரிந்துவிடும் என கூறியுள்ளனர்.