பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் படங்களை ஆபாசமாக இணையத்தில் வெளியிட்ட இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாகவே ஐதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளை சேர்ந்த பல மாணவிகள், பெண்கள் மற்றும் ஆசிரியைகளின் படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதனை பார்த்த அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 16ம் திகதியன்று இதேபோல பள்ளி முதல்வரின் படமும் ஆபாசமாக பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
மேலும் அந்த பள்ளிக்கு சாய்ரா ஜோசப் என்கிற பெயரில் போன் செய்த இளம்பெண், நான் இன்ஜினியரிங் பட்டதாரி. முகநூலில் நான் பதிவேற்றம் செய்திருக்கும் படங்களை அகற்ற வேண்டும் என்றால், நான் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் சைபர் கிரைம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், பிளே ஸ்கூல் நடத்தி வந்த இளம்பெண் ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பாத்திமா என்கிற அந்த பெண், ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளின் சுயவிவரங்களுக்காக கூகிள், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் உலாவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் படங்களை சேகரித்துள்ளார்.
அவை அனைத்தையும் ஆபாசமாக மார்பிங் செய்து, பேஸ்புக்கில் தான் நிர்வகித்து வந்த தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதோடு அல்லாமல், சம்மந்தப்பட்ட நபர்களின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் அனுப்பி வைத்து மிரட்டியுள்ளார்.
இதேபோல் கடந்த 20 நாட்களில் 4 பள்ளிகளை சேர்ந்தவர்களின் படங்களை மார்பிங் செய்து முகநூலில் ஆபாசமாக பதிவேற்றம் செய்து மிரட்டியிருக்கிறார்.
ஆடம்பர சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே இதுபோன்று செய்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.