அதிர்வலைகளை ஏற்படுத்திய சுபஸ்ரீயின் அகால மரணம்.. தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கை!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் விழுந்து உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடா செல்லும் கனவுடன் இருந்த சென்னைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண், திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று சரிந்து விழுந்ததால், தண்ணீர் லொறியின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இந்த விடயம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் பதாகைகள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர்.

அதேசமயம் உயர்நீதிமன்றமும் பதாகைகளை வைக்கும் அரசியல் கட்சிகளை கண்டித்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக பதாகைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘அ.தி.மு.க தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகத் தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் மனம் அறிந்து, தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவது தான் அ.தி.மு.க உடன்பிறப்புகளின் தலையாய கடமையாக இருந்திடல் வேண்டும்.

இந்தக் கருத்தினை கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் பல நேரங்களில் கழக உடன்பிறப்புகளுக்கு, அம்மா நினைவூட்டி வந்திருக்கின்றார்கள். அம்மாவின் வழியில், அம்மாவின் நல்லாசியோடு அரசியல் பணியாற்றி வரும் நாங்களும் இந்த வேண்டுகோளை கழக உடன்பிறப்புகளிடம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.

அ.தி.மு.க நிகழ்ச்சிகளுக்கோ, கழகத்தினர் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பதாகைகள் வைப்பதை அன்பு கூர்ந்து நிறுத்தி விட வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கழகத்தினர் ஈடுபடவே கூடாது. ஒரு சிலர் ஆர்வமிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும்போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.

எனவே எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...