நாசா விண்வெளி மையத்திற்கு செல்லும் தமிழக மாணவி! தேநீர் கடைக்காரரின் மகள் செய்த சாதனை

Report Print Kabilan in இந்தியா
603Shares

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், அறிவியல் தேர்வு எழுதி நாசா செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருபவர் தான்யா தஸ்னம். இவர் அமெரிக்க நிறுவனம் நடத்திய அறிவியல் தேர்வில், இந்திய அளவில் முதல் இடம் பிடித்தார்.

இதன்மூலம் நாசா செல்லும் அரிய வாய்ப்பினை பெற்று சாதித்துள்ளார் தான்யா. இவருடன் சேர்த்து மேலும் இரண்டு இந்திய மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெற்றனர்.

தான்யாவின் தந்தை ஜாபர் உசேன் தேநீர் கடை நடத்தி வருகிறார். தனது மகள் இந்தப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து அவர் கூறுகையில்,

‘மதுரை அழகர் கோயில் கடச்சனேந்தல்ல தேநீர் கடை வைத்திருக்கிறேன். வீட்டுக்குப் பக்கத்திலேயே கடை. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். முதல் பெண் பத்தாவதும், இரண்டாவது பெண் ஐந்தாவதும் படிக்கிறார்கள். இருவருமே மதுரை மகாத்மா மாண்டிசோரி பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

தான்யாவுக்கு அறிவியல் தொடர்பான செய்திகள் என்றால் தேடித்தேடி படிப்பாள். இப்போது மட்டுமல்ல, ஐந்தாவது படிக்கும்போதிலிருந்தே வந்துவிட்டது. அப்துல்கலாம் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருப்பாள். பெரிய Scientist ஆக வேண்டும் என்பது ஆசை. பள்ளிப்பாடங்களையும் நன்றாக படிப்பாள்.

போன வருடம் டிசம்பர் மாதம், பள்ளிக்கு Go4guru என்ற அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். கல்பனா சாவ்லா, அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் யாரேனும் ஒருவரைப் பற்றி 20 பக்க அளவில் கட்டுரை எழுதும் போட்டியை கூறியிருந்தார்கள்.

இயல்பாகவே, தான்யாவுக்கு அறிவியல் பிடிக்கும் என்பதால், உடனே சேர்ந்துவிட்டாள். இந்தத் தேர்வு பற்றி இணையதளத்திலேயும் இருக்கிறது என்று கூறினார்கள். அந்த நிறுவனம் கொடுத்திருந்த ஒரு வார காலத்தில், அப்துல் கலாம் பற்றி நிறைய விடயங்களைத் தேடிப் படித்தாள்.

20 பக்கங்களுக்கு விரிவான கட்டுரையாக போட்டியில் எழுதினாள். பள்ளியிலும் மிகவும் உதவி செய்தார்கள். இந்தப் போட்டித் தேர்வில் இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களைச் சேர்ந்த 9,000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

ஆனால், தான்யா ரொம்ப நம்பிக்கையோடு இருந்தார். அவளது நம்பிக்கை பொய்யாகவில்லை. இந்திய அளவில் தெரிவான மூன்று பேரில், இவளுடைய பெயரும் இருந்தது. அதிலேயும் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். எங்கள் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சி.

இரண்டு மாதங்களுக்கு முன் வந்து, தான்யா இந்தப் போட்டியில் வென்றதற்காக Shield கொடுத்தார்கள். இந்த வாரம் சென்னை வர கூறி, விண்வெளி வீரர் டான் ஜான்சன் முன்னிலையில் அமெரிக்கா போவதற்கான விமான டிக்கெட் கொடுத்தார்கள்.

சென்னையில் இருந்து அக்டோபர் 1ஆம் திகதி, நாசாவுக்கு செல்கிறார்கள். 9 நாட்கள் பயணத்தில், மூன்று நாட்கள் நாசாவில் இருக்கலாம். அதன் பின்னர் அங்கே நடக்கும் தேர்வில் வெற்றி பெறும் ஐந்து பேருக்கு cambridge university-யில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்