நான் உயிரோடு இருக்கிறேனா? நள்ளிரவில் நடந்தது என்ன? கேரளா மழையில் உயிர் தப்பியவரின் திகில் அனுபவம்

Report Print Raju Raju in இந்தியா

கேரள மாநிலம் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமாரை எக்ஸ்பிரஸ் குழுவினர் சந்தித்த போது அவரது முகத்தில் அதிர்ச்சியும் பயமும் மழை வெள்ளம் போல தேங்கியிருந்தது.

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பனன்காயம் நிவாரண முகாமில் தங்கியிருக்கும் சுனில்குமார் என்பவர் நிலச்சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இவர்தான், கவலப்பாராவில் வெள்ளிக்கிழமை 58 பேர் மரணத்துக்குக் காரணமாக அமைந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தவர்களில் ஒருவர்.

இதுபோன்றதொரு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி தான் உயிர் பிழைப்பேன் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

இதுபற்றி அவரே விவரிக்கிறார், சம்பவம் நடந்த போது நான் என் வீட்டில் இருந்தேன். வெளியே கன மழை பெய்து கொண்டிருந்தது. சுமார் இரவு 8 மணி இருக்கும். பயங்கர சத்தம் கேட்டது. டார்ச் விளக்கோடு நான் வெளியே வந்தேன். கன மழை காரணமாக வெளியே இருட்டில் எதுவுமே தெரியவில்லை.

என் வீட்டுக்கு முன்னால் இருந்த ஒரு சிறிய கால்வாயில் மழை வெள்ளத்தோடு சேறும் கலந்து சென்று கொண்டிருந்தது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்று அப்போது நான் நினைத்தேன்.

ஆனால், எச்சரிக்கை கொடுக்கலாம் என்று நினைத்தபோது யாருமே வெளியே இல்லை. அன்று காலை எழுந்து பார்த்தபோது என் பக்கத்து வீடுகள் அனைத்தும் சேற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டிருந்தது. சுமார் 19 வீடுகள் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதைந்திருந்தது என்கிறார் சுனில்குமார்.

நான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை என்னால் முதலில் நம்பமுடியவில்லை, இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக கடந்த ஆண்டே அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு நடந்த மண் பரிசோதனையில் மண் பலமாக இருப்பதாகக் கூறிவிட்டனர்.

அதை மக்கள் நம்பித்தான் இந்த கடுமையான மழை வெள்ளத்திலும் வேறு எங்கும் செல்லாமல், செல்வதைப் பற்றிக் கூட சிந்திக்காமல் இருந்துவிட்டனர் என்கிறார் அவர்.

எங்கள் அக்கம் பக்கத்து வீட்டினர் எல்லாம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்று நினைக்கவேயில்லை. அதிர்ஷ்டவசமாக எங்கள் வீடு மட்டும் அதில் இருந்து தப்பி நின்றது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்