காதல் மனைவி மற்றும் குழந்தைகளை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தந்தை

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் மனைவியின் மீது இருந்த சந்தேகத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த சாந்தினி (28) தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் மூலம் அயான் என்கிற 9 வயது மகன் இருந்தார்.

அதன்பிறகு குரு பிரவீன் குமார் (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரவீன் குமார் மூலம் சாந்தினிக்கு 5 வயதில் கிறிஸ்டி என்கிற மகள் இருந்தார்.

திருமணம் முடிந்ததிலிருந்தே சாந்தினி மீது பிரவீன் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனரீதியிலும் உடல்ரீதியிலும் அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனை குடும்பத்தில் இருந்து யாரேனும் தட்டிக்கேட்டால், அவர்களையும் தாக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரவீனின் தாய் மற்றும் சகோதரன் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். உடனே அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியதும், இரும்பு ராடால் சாந்தினியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சாந்தினி உயிரிழந்துவிட்டார். பின்னர் தற்கொலை செய்துகொள்வதற்காக பிரவீன் ரயில்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால் தங்களுடைய இரண்டு குழந்தைகளும் அனாதையாகிவிடுமே என நினைத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அங்கு இரண்டு குழந்தைகளையும் அதே இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்