வெளிநாட்டில் ஒன்றாக தங்கினோம்.. திருமணத்திற்கு மறுத்ததால்.. காதலனின் பகீர் வாக்குமூலம்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவியை, அவரது காதலன் தீவைத்து கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர். இவரது மகள் ரம்யா திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தவச்செல்வன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ரம்யா தனது வகுப்புத் தோழியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த 22ஆம் திகதி ரம்யா தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தவச்செல்வன் அங்கு வந்துள்ளார். அவர் ரம்யாவுடன் தனியாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தோழிகள் ஓடிவந்து பார்த்துள்ளனர்.

அப்போது ரம்யாவின் மீது தவச்செல்வன் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்ட தோழிகள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், தப்பியோடிய தவச்செல்வனை தேடி வந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வடுகப்பட்டியில் அவரை பிடித்தனர். பொலிசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் தவச்செல்வனின் கால் உடைந்தது. இதனால் ரம்யா அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் அவரும் சேர்க்கப்பட்டார்.

பின்னர் பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘நானும், ரம்யாவும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பழகி வருகிறோம். இருவரும் காதலித்து வந்த நிலையில், அவருக்காக சென்னையில் டிராவல்ஸ் வைத்திருந்த நான், ஊருக்கு வந்து தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

கடந்த 2017ஆம் ஆண்டு அவருடன் வெளிநாட்டுக்குச் சென்றேன். அங்கு இருவரும் 4 மாதங்கள் ஒன்றாக தங்கினோம். பின்னர் ஊருக்கு வந்ததும் அவர் படிப்பை தொடர்ந்த நிலையில், செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். ஆனால், கடந்த 6 மாதங்களாக அவர் என்னிடம் சரியாக பேசுவதில்லை. தொடர்ந்து என்னை புறக்கணித்து வந்ததால், அவரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன்.

அவர் மறுத்துவிட்டார். இதனால் அடிக்கடி எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் வேறு யாருடனோ பழகி வருவதால் என்னை நிராகரித்து வந்தார். அதனால் அவரை கொல்ல முடிவெடுத்து, கடந்த 22ஆம் திகதி பெட்ரோலுடன் அவரது வீட்டிற்கு சென்றேன்.

தோழிகளுடன் இருந்த அவரை தனியாக அழைத்துச் சென்று, என்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினேன். அதற்கு அவர் மறுத்ததால், பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்