பரோலில் விடுவிக்கப்பட்டார் நளினி...! மகள் திருமணம் கோலாகலம்

Report Print Abisha in இந்தியா

லண்டனில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாட்டுக்காக நளினி சிறையில் இருந்து பரோலில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்

அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), கடந்த 1992-ஆம் ஆண்டு வேலூர் பெண்கள் சிறையில் பிறந்தார்.

தொடர்ந்து, 3 ஆண்டுகள் சிறையிலேயே நளினியுடன் வளர்ந்து வந்த ஹரித்ரா, அதன்பிறகு கோவையிலுள்ள உறவினர் வீட்டில் 3 ஆண்டுகளும், பின்னர் இலங்கையில் 5 ஆண்டுகளும் வளர்ந்தார்.

இதையடுத்து லண்டனில் உள்ள முருகனின் சகோதரர் வீட்டில் தங்கி படித்து வந்த ஹரித்ரா தற்போது மருத்துவப் பட்டம் பெற்று அங்கு பணியாற்றி வருகிறார்.

தனது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் திகதி உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் இருந்து நளினி ஞாயிற்றுக்கிழமை பரோலில் விடுவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அவர் விடுவிக்கபடவில்லை

இந்நிலையில், இன்று காலை நளினி பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பரோலில் வெளியில் வந்த நளினி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டில் ஒரு மாத காலம் தங்கியிருந்து ஹரித்ராவுக்கு மாப்பிள்ளை பார்த்தல் உள்ளிட்ட திருமண ஏற்பாடுகளை செய்ய உள்ளார். இதனிடையே, திருமண நிகழ்வுக்காக அவரது மகள் ஹரித்ரா அடுத்த இரு வாரங்களில் லண்டனில் இருந்து வேலூருக்கு வர இருப்பதாகவும் வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்