தமிழகத்தில் குறைந்த விலையில் வீடு வாங்கித்தருவதாக கூறி, தாய் மற்றும் மகன் இருவரும் மோசடி செய்து வந்த நிலையில், பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்து இருக்கும் பெரும்பாக்கம், எழில் நகரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 8 மாடி அடுக்கு குடியிருப்புகள் உள்ளன.
இந்நிலையில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சித்ரா என்ற பெண், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிசை வீடு மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் சென்று பெரும்பாக்கத்தில் புதிதாக தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை குறைந்த தொகையில் வாங்கித் தருவதாக, அவர் மற்றும் அவரின் மகன் ராபர்ட் அமல்ராஜ் ஆகியோர் சுமார் 30,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர்.
கடந்த 5 வருடங்களாக பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வீடுகளை தராமல் ஏமாற்றி வந்ததுடன், தங்கும் வீட்டையும் அடிக்கடி மாற்றி வந்துள்ளனர்.
ஒரு சிலர் தொடர்ந்து வீட்டைப் பற்றி கேட்டு தொந்தரவு செய்து கொண்டே இருந்ததால், வீடு ஒதுக்கப்பட்டதாக கூறி அரசு முத்திரை உடன் கூடிய சான்றிதழ் மற்றும் வீட்டின் சாவி ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.
வீடு ஒதுக்கியதற்கான ஆவணங்கள் கிடைத்தும் வீடு கிடைக்காத மக்கள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். ஆவணங்களை சரி பார்த்த அதிகாரிகள் இது போலியானது என கூற, அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன் பின் சித்ராவால் ஏமாற்றப்பட்டவர்களில் 57 பேர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தாய்-மகனை தேடி வந்த பொலிசார் இருவரையும் கைது செய்தனர்.
பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இது போன்று 100-க்கும் மேற்பட்டோரிடம் வீடு வாங்கித் தருவதாக 30 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டனர்.