பிரித்தானியாவில் இருக்கும் என் மகளுக்கு தாயாக எதுவும் செய்யவில்லை: பரோலில் வெளிவரும் நளினி உருக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி தனது மகள் திருமணத்திற்காக பரோலில் வெளிவருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி, பிரித்தானியாவில் இருக்கும் தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால் சட்ட விதிகளின்படி 6 மாதம் பரோல் வழங்க முடியாது என குறிப்பிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஏ. நடராஜன், அதிகபட்சமாக 30 நாள் வழங்கலாம் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகளின் திருமணத்தின் ஏற்பாட்டை கருத்தில் கொண்டு நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தில் வாதிட்ட நளினி, சிறையில் பெற்றெடுத்த என் மகளுக்கு தாய் என்ற முறையில் நான் எதுவும் செய்யவில்லை.

அவளுக்கு சோறூட்டவில்லை, பாடசாலைக்கு அனுப்பவில்லை, துணி எடுத்து கொடுக்கவில்லை. ஒரு தாயாக எந்த ஒரு கடமையும் நான் மகளுக்கு செய்யவில்லை.

இதுவே தனக்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை என்று உருக்கமாக வாதிட்டார். இதனிடையே வேலூர் மத்திய சிறையில் உள்ள கணவர் முருகனுடன் சுமார் ஒரு மணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, மகளின் திருமண ஏற்பாடுகள், பரோலில் எப்போது செல்லலாம்?, கூடுதலாக பரோல் கேட்க மேல்முறையீடு செய்யலாமா? என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அடுத்த வாரத்தில் நளினி பரோலில் செல்ல முடிவு எடுத்திருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். அதன்படி, காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நளினி தங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட குடியிருப்பை சுற்றிலும் உளவுத்துறையினர் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers