இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்.

கடந்த மக்களவை முடிவுறும் நிலையில், அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் பின்னர் இன்றைய தினம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தற்போது 2019-2020ஆம் ஆண்டின் பொதுபட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை கொண்டு செல்ல முனைப்பு காட்டப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ‘புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அரசின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சந்திராயன், ககன்யான் என விண்வெளித்துறையில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.

அனைவருக்கும் வீடு, கழிவறையை உறுதிப்படுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்’ என தெரிவித்தார்.

இதற்கு முன்பு, கடந்த 1970யில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, கூடுதல் பொறுப்பாக நிதித்துறையை கவனித்து வந்தார். ஆனால், தனி பொறுப்பாக முழு நேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார்.

2019-2020 பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
 • உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு
 • 2014யில் ஆட்சியமைக்கும் போது, 1.55 லட்சம் கோடி டொலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டொலராக உயர்வு
 • ‘Make in India' திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது
 • இந்திய பொருளாதாரம் உலகின் 3வது பொருளாதாரமாக விளங்குகிறது
 • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன
 • 2வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்
 • ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பு பயன்படுத்தப்படும்
 • ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்
 • வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும்
 • 2030ஆம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
 • ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
 • நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம் செயல்படுத்தப்படும்
 • ஆண்டுக்கு ரூ. 1.5 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
 • நிதி நெருக்கடியால் தவித்த 6 பொதுத்துறை வங்கிகள் மீட்கப்பட்டுள்ளன
 • பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த ரூ. 70,000 கோடி முதலீட்டு மூலதனம் வழங்கப்படும்
 • உலக சந்தையில் இந்திய கைவினைக்கலைஞர்களின் தயாரிப்புகளை விற்க நடவடிக்கை
 • சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்த மத்திய அரசு திட்டம்
 • வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது ஆதார் எண் வழங்கத் திட்டம்
 • அனைத்து ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும்
 • ஒவ்வொரு சுய உதவிக்குழுவிலும் உள்ள பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் நிதி உதவி
 • நாட்டில் உள்ள 17 சுற்றுலாத் தலங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்
 • அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 100 லட்சம் கோடி
 • உயர்கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்த ரூ. 400 கோடி

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers