விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு.. சிறை செல்கிறார் வைகோ: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Report Print Basu in இந்தியா

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவரின் பேச்சு, மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது தேச துரோக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட வைகோ மே 25ம் திகதி ஜாமீனில் வெளியே வந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.பி.,எம்.எல்.ஏ-க்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டவுடன், இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது.

வைகோ மீது பதிவான தேச துரோக வழக்கு குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், வைகோவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் வைகோவின் எம்.பி கனவு தகர்ந்துள்ளது.

நீதிமன்றம் விதித்த ரூ. 10 ஆயிரம் அபராதத்தை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தீர்ப்பை நிறுத்திவைக்குமாறு அவசர மனுவும் தாக்கல் செய்துள்ளார். வைகோவின் கோரிக்கையை ஏற்று தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை ஒருமாதத்துக்கு நிறுத்திவைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

தீர்ப்பிற்கு பிறகு பேட்டியளித்த வைகோ கூறியதாவது, இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். நான் விடுதலை புலிகளை எப்போதும் ஆதரித்து கொண்டே தான் இருப்பேன்.

நான் குறைந்தபட்ச தண்டனை வழங்ககும் படி கேட்டதாக நீதிபதி குறிப்பிட்டார். நான் எந்த காலத்திலும் தண்டனையை குறைக்க சொன்னதில்லை, அதிகபட்ச தண்டனை வழங்குள் என்றுதான் சொன்னேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers