டிக்டாக்கில் இணைந்து அவதூறு பரப்பிய நண்பர்கள்: கொலையில் முடிந்த விபரீதம்

Report Print Abisha in இந்தியா

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே குறிப்பிட்ட சாதியை விமர்சித்து வெளியிடப்பட்ட டிக்டாக் வீடியோ இரு இளைஞர்களின் உயிர் பறிக்க காரணமாகி உள்ளது.

திருத்தணியை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற இளைஞர் நண்பர் விஜயனுடன் இணைந்து குறிப்பிட்ட சாதியை இழிவு படுத்தி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விபரீதம் தெரிந்து கொள்ளாத இருவரும் ஜாலியாக ஊரில் வலம்வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தங்களின் சாதியை இழிவு படுத்தியதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து திருத்தணி போலீசார் வெங்கட்ராமன் மற்றும் விஜயன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வந்தனர்

கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் கூட்டாக மது அருந்திக் கொண்டிருந்த போது, வீடியோ பதிவேற்றம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கட்ராமன், கூட்டாளி விஜயனின் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகின்றது.

பின் வெங்கட்ராமன், திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்று நண்பரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சரண் அடைந்தார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மாதம் 17 ஆம் திகதி ஜாமீனில் வெளியே வந்த வெங்கட்ராமன், திருத்தணி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

கொலை வழக்கு மற்றும் டிக்டாக் வீடியோ வழக்குகளில் தண்டனை தொடர்பான அச்சத்தில் இருந்து வந்த வெங்கட்ராமன் மன குழப்பத்தில் தவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் செவ்வாய் கிழமை திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்ட வெங்கட்ராமன், அங்கிருந்து கார்த்திகேயன்புரத்தில் உள்ள ஏரிக்கரைக்கு சென்று, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்