நாடாளுமன்றத்தில் தொடங்கி இந்தியாவையே கலக்கும் தமிழ் வாழ்க..!

Report Print Basu in இந்தியா

நாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்கும்போது தமிழ் வாழ்க என முழக்கம் எழுப்பி பதவியேற்ற நிலையில் ட்விட்டரில் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழக எம்.பி.க்கள் தொகுதி வரிசை வாரியாக இன்று தமிழில் பதவியேற்றனர். தமிழக எம்.பி. தயாநிதி மாறன் பெரியார், கருணாநிதி வாழ்க எனக் கூறி பதவியேற்றார். விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் தமிழ் வெல்க எனக் கூறி பதவியேற்றார். தொடர்ந்து பல்வேறு தொகுதி எம்.பி.க்களும் தமிழில் பதவியேற்றனர்.

கரூர் தொகுதி எம்.பி ஜோதி மணி பதவியேற்றபோது வாழ்க தமிழ், வாழ்க தாயகம் எனக் கூறினார். மதுரை தொகுதி எம்.பியாக பதவியேற்றுக் கொண்ட சு.வெங்கேடசன் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழ் வாழ்க மார்க்சியம் வாழ்க எனக் கூறினார்.

சிதம்பரம் தொகுதி எம்.பி. தொல்.திருமாவளவன் ‘அம்பேத்கர், பெரியார்’ வாழ்க, வாழ்க ஜனநாயகம்’ எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதுபோலவே திமுக எம்.பி கனிமொழியும் தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றவுடன் தமிழ் வாழ்க, தமிழ் வெல்க என்று முழக்கங்களை எழுப்பியதற்கு சமூக வலைதளங்களில் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் அகில இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்