இலங்கை தேவாலய தாக்குதல்.. ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய மேலும் 3 பேர் தமிழகத்தில் கைது!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய மற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்தி வாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். மேலும் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைதளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது.

அதன் பின்னர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக கோவையைச் சேர்ந்த 3 பேர் செயல்படுவதாக, கோவை மாநகர நுண்ணறிவு பொலிசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதன் பேரில் கோவையில் ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரின் வீடுகளில் பொலிசார் நடத்திய சோதனையில் கைப்பேசிகள், கணினி ஹார்டு டிஸ்குகள், வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் முதலியன கைப்பற்றப்பட்டன.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மூவரும் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பது நிரூபணமானது. அதனைத் தொடந்து, அவர்களை பொலிசார் கைது செய்தனர். இந்நிலையில், மதுரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பின், சதகதுல்லா என்ற இளைஞரை பிடித்து பொலிசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ்.ஐ.எஸ் கும்பலுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின், கோவையைச் சேர்ந்த மற்ற 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பொதுமக்கள் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் மீதும், கோவையில் உள்ள தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

மேலும், இவர்கள் மூவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தீவிர ஆதரவாளர்களாக இருந்ததுடன், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பின்னணியாக செயல்பட்டதாக கூறப்படும் ஜஹரான் ஹசிமின் ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, வரும் 28ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்