தமிழகம் உங்களுக்கு குப்பைத் தொட்டியா? தமிழிசையை விளாசும் நெட்டிசன்கள்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத் தொட்டியா என நெட்டிசன்கள் பலரும் தமிழிசை சௌந்தரராஜனை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அதன் அணுக்கழிவுகளை எங்கே கொட்டுவது என்ற கேள்வி பல காலமாக நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக, வரும் ஜூலை 10ஆம் திகதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்க உள்ளது. இதற்கிடையில் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என அரசியல் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால், அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அணுமின் நிலையம் விளக்கமளித்துள்ளது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியை பார்வையிட்டதுடன், அணுக்கழிவு தொடர்பான தவறான தகவல்களின் காரணமாக பொது மக்களிடம் அச்ச உணர்வு காணப்படுகிறது.

இதனை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என்று கூறினார். மேலும் ட்விட்டரிலும் இதுதொடர்பான தகவலை பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத் தொட்டியா என நெட்டிசன்கள் பலரும் தமிழிசையை விளாசி வருகின்றனர்.

முன்னதாக, கர்நாடாகவில் உள்ள கோலாரில் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை கொட்டலாமா என்ற பேச்சு எழுந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, கர்நாடக பா.ஜ.க தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கு அணுக்கழிவுகள் கொட்டப்படாது என மத்திய அரசு உறுதி அளித்தது.

இதனை வைத்து தான் தமிழிசையை கடுமையாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். கர்நாடக பா.ஜ.க அனுமதி மறுக்கும் திட்டத்தை, பா.ஜ.கவை சேர்ந்த நீங்களும் இங்கு எதிர்ப்பு தானே தெரிவித்திருக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் தமிழகம் உங்களுக்கு என்ன குப்பைத் தொட்டியா? பாதுகாப்பான அம்சங்களுடன் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுமாயின், அதனை கோலாரிலேயே அமைத்துக்கொள்ளலாமே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்