வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவன்... அதன் பின்? குழந்தைகளை வைத்து தவிக்கும் மனைவி

Report Print Santhan in இந்தியா

குழந்தைகளின் படிப்பிற்காவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வெளிநாட்டிற்கு ஆடு மேய்க்கும் வேலைக்கு சென்ற தன் கணவனைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் அவரின் மனைவி மனு அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கோவிந்தபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர், முருகேசன்.

இவருக்கு, மகேஸ்வரி என்கிற மனைவியும் புவனேஸ்வரி மற்றும் மகேந்திரன் என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் குடும்பச் சூழல் கருதியும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முருகேசன், ஆடு மேய்க்கும் வேலைக்காக ஏஜென்ட்டுகள் மூலம் சவுதி அரேபியாவுக்கு 2 லட்சம் ரூபாய் கட்டி அனுப்பிவைக்கப்பட்டார்.

வெளிநாடு சென்ற முருகேசன், துபாய் நாட்டிற்கு சென்ற பிறகு, அவரிடமிருந்து தொலைபேசியோ அல்லது பணமோ மற்றும் அவர் குறித்த தகவல்கள் எதுவுமே தெரியவில்லை.

எந்த ஒரு தகவலுமே இல்லாததால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், பணம் கட்டிய ஏஜென்ட்டுகள் மற்றும் சவுதி அரேபிய நாட்டில் உள்ள ஏஜென்ட்டுகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

ஆனால் அவர்கள் முறையாக பதில் பதில் அளிக்காமல், அதற்கு மாறாக அவர்கள், இந்தியத் தூதரகம் மூலம் முருகேசன் குறித்து விசாரித்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதனால் பதற்றமடைந்த முருகேசனின் மனைவி மகேஸ்வரி, ஏஜென்ட்டுகள் மீதும், தனது கணவர் முருகேசனை மீட்டுத்தரக் கோரியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, துறையூர் காவல் நிலையம், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

ஆனாலும், முருகேசன் குறித்து எந்த வித தகவல்களும் தெரியாத நிலையில், இன்று தனது கணவரை மீட்டுத் தரக் கோரி மகேஸ்வரி மற்றும் அவரது மகள் புவனேஸ்வரி ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜை சந்தித்து மனு அளித்தார்.

அதன் பின் அவர் கூறுகையில், அவர் வெளிநாடு சென்றதிலிருந்து அவர் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.

எங்கள் குடும்பம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதுகுறித்து விசா எடுத்துத் தந்த ஏஜென்ட்டுகளிடம் கேட்டால், அலட்சியமாக பதில் கூறுகிறார்கள்.

அவரைக் கண்டுபிடித்து தரக்கோரி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தோம். அப்போது அவர்கள், விரைவில் எனது கணவரைமீட்டுத் தருவதாகக் கூறினார்கள். அவர்கள் கூறியதை நம்பி, மாதக்கணக்கில் காத்துக் கிடக்கிறேன்.

இதுவரை எந்தத் தகவலும் இல்லை. படித்துமுடித்த மகள் மற்றும் மகன் ஆகியோரை வைத்துக்கொண்டு அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.

தனியாக உழைத்து இரண்டு பிள்ளைகளைக் காப்பாற்றுவது மிகவும் சிரமமாக உள்ளது. அவர் குறித்து எந்தத் தகவலும் தெரியாமல் இருப்பது எங்களுக்கு சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. எனது கணவரை நல்ல படியாக மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்