மோடி பிரதமராவதற்கு எதிர்ப்பு.. ஆக்ஸ்போர்டில் முதுகலை பட்டம்! யார் இந்த சர்ச்சை நாயகன் கிரிஷ் கர்னாட்?

Report Print Kabilan in இந்தியா

இன்று காலமான பிரபல நடிகரும், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட், தன் வாழ்நாளில் கடந்து வந்த பாதை குறித்து காண்போம்.

கன்னட எழுத்தாளரும், பிரபல நடிகருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தனது 81வது வயதில் இன்று காலை அவர் மரணமடைந்தார்.

கடந்த 1938ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த இவர், கர்நாடகா பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளியியலில் பட்டம் பெற்றார். அதன் பின்னர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவவியலிலும், அரசியல் மற்றும் பொருளாதார துறைகளிலும் பட்டம் பெற்றார்.

இலக்கியம் மீது கொண்ட ஆர்வத்தினால் முழுநேர எழுத்தில் ஈடுபட்ட கிரிஷ் கர்னாட், ‘முகமது பின் துக்ளக்’-யை வைத்து அப்போதைய அரசியலை கடுமையாக விமர்சித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

1961ஆம் ஆண்டு இவரது முதல் படைப்பான ‘யவாதி’, மகாபாரத கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு மிகவும் பிரபலமானது. 1970ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா’ என்ற படத்தில் நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் கிரிஷ் கர்னாட் பங்குபெற்றார்.

மதசார்பின்மைவாதியான இவர், கடந்த 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராவதை எதிர்த்தார்.

நடிகராகவும் கோலோச்சிய கர்னாட், தமிழில் ரட்சகன், காதலன், காதல் மன்னன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அத்துடன் கன்னடம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுத்து, இயக்கம், நடிப்பு என திரைத்துறையின் ஆல்-ரவுண்டராக இருந்துள்ளார்.

திரைப்படத்துறையில் தேசிய விருதுகள், சாகித்திய அகாடமி விருது, பத்ம விபூஷண், பத்மபூஷன் என பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சவுதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகம், இவருக்கு 2011ஆம் ஆண்டு‘கௌரவ முனைவர் பட்டம்’ அளித்தது.

தன் மனதிற்கு படும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் வெளிப்படையாகப் பேசக்கூடிய கர்னாட், தன் வாழ்நாளின் பாதியை சர்ச்சைகளை சந்தித்தே தன் வாழ்வை கடந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்