அன்று கையில் தவழ்ந்த பிஞ்சு குழந்தை.. இன்று இளைஞராகி கையை பிடித்த தருணம்: ராகுல் காந்தியை சந்தித்த நர்ஸ் நெகிழ்ச்சி

Report Print Arbin Arbin in இந்தியா

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தபோது அவரை முதன் முறையாக கையில் ஏந்திய கேரள செவிலியரை, அவர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரி, கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மா.

ஓய்வு பெற்ற செவிலியரான ராஜம்மா(72) டெல்லி ஹோலி ஃபேமலி மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி முடித்து பின்னர் ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராகுல் காந்தியின் பிறந்த நாட்டு சர்ச்சை எழுந்தது. அப்போது, ’ராகுல் காந்தி இந்தியாவில்தான் பிறந்தார் என்பதற்கு நானே சாட்சி.

ஏனென்றால் ராகுல் காந்தி பிறந்த மருத்துவமனையில் நான் செவிலியராக பணியாற்றினேன்.

சோனியா காந்திக்கு பிறந்த ஆண் குழந்தையை நானும் கையில் ஏந்தினேன். அவர் இப்போது வயநாட்டில் போட்டியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்று கூறியிருந்தார்.

மேலும், ராகுல் காந்தியை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், வயநாட்டில் போட்டியிட்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராகுல் காந்தி, அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

இன்று அவர் கோழிக்கோடு பகுதியில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜம்மாவை சந்தித்தார். அவரைக் கண்டதும் ராகுல் காந்தி கட்டியணைத்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சிறிது நேரம் செவிலியரிடம் பேசிய ராகுல் காந்தி பின்னர் அங்கிருந்து சென்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்