மோடி பதவி ஏற்பு விழாவில் பலரின் கவனத்தை ஈர்த்த தமிழன்... யார் இவர்? உலகநாடுகள் மகிழ்ச்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற நிலையில், அதில் அமைச்சராக பதவியேற்ற ஜெய்சங்கர் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் இலங்கையில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலின் முடிவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதில் பிரதமர் பதவியேற்பு விழா நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

இதில் கடந்த முறை அமைச்சர்களாக இருந்த சிலர் இந்த முறை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமைச்சரவையில் இடம் பெறவில்லை, குறிப்பாக கடந்த முறை நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தானாக முன்வந்து தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று விலகினர்.

இதனால் சில அமைச்சர்கர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சில புதியவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் தமிழகத்தில், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடைசியில் அது இல்லாமல் போனது.

இந்நிலையில் இதை எல்லாம் தாண்டி நேற்றைய பதவி ஏற்பு விழாவில் மிகவும் பெரிய அளவில் பேசப்பட்ட நபர் என்றால் அது ஜெய்சங்கருக்கு கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவி தான். இவர் யார்? இவருக்கு எப்படி அமைச்சர் பதவி என்று பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், அவரைப் பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது.

இவர், ஐ.எப்.எஸ் அதிகாரியாக இவர் உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர். 1955-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்.

இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணியாற்றியவர். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.

டெல்லியில் இருக்கும், ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

டெல்லி ஜே.என்.யு -வில் பி.ஹெச்.டி பெற்ற இவர் 1977 -ஆம் ஆண்டு ஐ.எப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார்.

பின்னர் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக 1985 முதல் 1988 வரை பணியாற்றியுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றிய இவர், அப்போது இந்திய அமைதிப்படைக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இது தவிர இந்தியாவின் வெளியுறவுத் துறை தொடர்பாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.

2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையராக பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து சீனாவுக்கான இந்திய தூதர் ஆன இவர், சுமார் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.

சீனாவுக்கான இந்தியத் தூதராக செயல்பட்ட காலத்தில்தான் மோடிக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, முதன் முறையாக சீனாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது இருவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக 2013 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டார்.

மோடி 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்கிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் காரணமாக மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவந்தது. அதுமட்டுமின்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை உரையாற்றச் செய்யும் சவாலான பணியைச் செய்து முடித்தார்.

இதனால் அன்று மோடியின் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத ஒருவருக்கு மோடி இப்படி கேபினேட்(வெளிவிவகரத் துறை) பதவி வழங்கியிருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருந்தாலும், இந்த முடிவில் உலகநாடுகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏனெனில் இப்படி வெளியுறவுத்துறை தொடர்பான பல விஷயங்களைச் செய்த அனுபவமிக்க ஒருவரை நியமித்தது தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட யாருக்கும் இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கப்படவில்லை. எனினும் வெளியுறவுத் துறையில் உள்ள அனுபவம் காரணமாக இவருக்கு வெளியுறவுத் துறை இலாகாதான் ஒதுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers